ஜுன் 27


மெய்யான கிறிஸ்தவன்
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - (யோவான் 13:35).

ஓரு கிராமத்தில் அநேக கிறிஸ்தவர்கள் இருந்தனர். அங்கிருந்த ராணி என்ற வாலிப பெண்ணுக்கு கிறிஸ்தவத்தின் மீது சற்று ஈர்ப்பு இருந்தது. காரணம் தான் சிறுவயதில் கேட்ட சுவிசேஷமே! பின் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை வாசிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடத்தில் வீட்டிற்கு தெரியாமல் வேதத்தை மூன்று முறை வாசித்து விட்டாள். அவ்வப்போது பொது கூட்டங்களில் கலந்துகொண்டாள்.
.
வெள்ளை உடை அணிந்து ஆராதனைக்கு போகிறவர்களை தேவதூதர்கள் போல் எண்ணினாள். அந்நிய பாஷை பேசி பரவசமாக ஆராதிப்பவர்களை பார்க்கும்போது, இவர்கள் பரலோகத்திற்கு தகுதி பெற்ற பரிசுத்தவான்கள் என்று நினைத்தாள். சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களை பேதுருக்கள் என்றும் மேடையில் முழங்கியவர்களை எலியாக்கள் என்றும், சபை நடத்துபவர்களை சத்தியவானகள் என்றும் எண்ணினாள்.
.
மாதங்கள் உருண்டன. சபைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அங்கோ வெள்ளை உடை உடுத்தின பலருடைய கறைபடிந்த இருதயங்ளை காண நேரிட்ட போது அதிர்ச்சியடைந்தாள். அந்நிய பாஷை பேசினவர்கள் அன்பற்ற வார்த்தைகளை பேசியதை கேட்டபோது, கேள்விகள் பல எழும்பின. நாங்க்ள இயேசுவின் அடிமைகளென பேசின பலரும் தங்களது வாழ்ககை பாதையில் பணம், பொருள், ஆடம்பரம், அந்தஸ்து, புகழ் ஆகியவற்றக்கு அடிமைகளாயிருப்பதை கண்டபோது யார் சத்தியவான் என கேட்க நாவு துடித்தது.
.
சில இடங்களில் விசுவாசிகளை பாதுகாக்க வேண்டிய போதகர்களே, வேலியே பயிரை மேய்ந்த அநியாயத்தையும், பசுத்தோல் போர்த்திய புலிகளாக, வெளியே பரிசுத்தர்களாக, சாதுக்களாக, ஆனால் உள்ளேயோ விசுவாசிளை பட்சிக்கிற போதகர்களாக இருப்பதை கண்டு திடுக்குற்றாள்.
.
ஆனால் வேதத்தை வாசிக்க வாசிக்க தவறு தன் பக்கமே இருக்கிறது என உணர்ந்தாள். கிறிஸ்தவர்களையும், ஊழியர்களையும் வெளித்தோற்றத்தை கொண்டு அடையாளம் கண்டதே அத்தவறு. ஆனால் வேதம் கூறும் அடையாளங்கள் வேறு என்பதை அறிந்தாள். மரத்தை கனிகளால் அறிவது போல பரிசுத்தவான்களை அவர்களின் செயலினால் அறிந்திட சொன்னார் இயேசு. ஒருவரையொருவர் நேசிப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தேவனுடைய புத்திரர்களா? என அறிய சொன்னார். ஊழியர்களின் செய்தியை வேதத்தின் வெளிச்சத்தை கொண்டு பகுத்தறிய சொன்னார்.
.
ஆம், கிறிஸ்தவர்களின் உண்மையான பரிசுத்தத்திற்கு வெளிப்புற நடக்கையும் சாட்சி கொடுக்க வேண்டும். ஆயினும் அவர்களுடைய அன்பின் செயல்பாடு, தாழ்மை, நேர்மை, பிறர் நலம் தேடும் பண்பு, கபடற்ற வார்த்தை, பெருமையை பிரதிபலிக்காத நடவடிக்கை போன்றவற்றினாலேயே உண்மையான கிறிஸ்தவன் யார், மாய்மாலக்காரன் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக தேவன் நம்மை இரட்சிக்கவில்லை. இப்படிப்பட்ட உண்மை கிறிஸ்தவ செயல்பாடுகள் நம்மில் காணப்பட வேண்டும் என்றே இயேசு விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான பரிசுத்தவான்கள்!
.
பிரியமானவர்களே, பிறர் கண்களை கவரும் சில ரோஜாக்களில் மணமிருப்பதில்லை. ஆனால் வண்ணத்து பூச்சிகளும், வண்டுகளும் தானாகவே வந்து மொய்ப்பது மணமும், தேன் சுவையுமுள்ள பூக்களையே! வெளித்தோற்றத்தால் மட்டும், பிறரை தன் பக்கத்தில் ஈர்ப்பது மெய் கிறிஸ்தவனல்ல, தேவன் விரும்பும் சுகந்த வாசனையும், கனியும் நம்மிடம் காணப்படும்போது அதை பிறர் அடையாளம் கண்டு, நம்மூலம் கிறிஸ்துவை ருசிபார்ப்பது நிச்சயமல்லவா? அப்படிப்பட்டதான தேவன் விரும்பும் சுகந்த வாசனை வீசுகிறவர்களாக, நற்கனிகளை கொடுக்கிறவர்களாக நாம் மாறி, கிறிஸ்துவை மற்றவர்களுக்கு பிரதிபலிப்போமா?
.
 உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
 என்னைத் திருத்த வேண்டும் தேவா
 கருத்தோடு உமது வசனம்
 கற்றுத் தந்து நடத்த வேண்டும்
...
 என் பார்வை சிந்தை எல்லாம்
 நீர்காட்டும் பாதையில் தான்
 என் சொல்லும் செயலும் எல்லாம்
 உம் சித்தம் செய்வதில் தான்
...
 மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
 துதியும் கனமும், தூயோனே உமக்கே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உள்ளான இருதயத்தில் தேவன் விரும்பும் கனிகளும், உண்மையும், உத்தமும் எங்களிலே காணப்பட கிருபை செய்வீராக. எங்களை காண்கிறவர்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் நடை, உடை, சொல், செயல், எல்லாம் உம்மை பிரதிபலிக்கதக்கதாக, இருதயத்திலிருந்து எங்கள் செயல்கள் வெளிப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

நன்றி : அனுதினமும் மன்னா

No comments: